சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் பேசப்படும் மொழி என்றும், அதன் வளத்தையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது அனைவரின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடுவது பொதுமக்களுக்கு வழக்கின் விவரங்களை எளிதாக புரிந்துகொள்ள உதவும் என்றும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.
தமிழில் பேசப்படுவதை ஆங்கிலத்தில் கேட்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது. எனவே, தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்றும், தமிழ் மொழிக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
