குவைத்: குவைத்தில் வீட்டுப் பணிக்காகச் சென்று சித்ரவதைக்கு ஆளானதாக கூறப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெண் இந்திய தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வனிதா (35), குடும்ப வறுமை காரணமாக ஏஜென்ட் ஒருவர் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குவைத்துக்கு வீட்டுப் பணிக்காக சென்றார்.
அங்கு வேலை பார்த்த வீட்டில் சிறிய அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறி வனிதா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வனிதாவின் தாயார் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட காவல்துறை, மத்திய வெளியுறவுத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.
இதற்கிடையே வனிதாவின் வீடியோ குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் கவனத்திற்குச் சென்றது. அதிகாரிகள் அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
தற்போது இந்திய தூதரகத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனக்கு நல்ல உணவும் உடையும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்து வனிதா நன்றி தெரிவித்துள்ளார்.
