நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலை வடிவமைக்கும் நிகழ்ச்சியில், இந்து மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு விநாயகர் சிலை செய்வது குறித்து கற்றுக்கொடுத்த சம்பவம் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 76 பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதில் இந்து மாணவர்கள் தங்களது முஸ்லிம் சக மாணவர்களுடன் இணைந்து இயற்கை களிமண்ணால் விநாயகர் சிலைகளை வடிவமைத்தனர். மேலும், சிலை செய்வது குறித்து தங்களுக்குத் தெரிந்த முறைகளை சக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், பல்வேறு மாணவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.
ஒன்றாகச் சேர்ந்து சிலை வடிவமைத்தது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், நல்ல நட்பை வளர்த்துக்கொள்ளவும் உதவியதாகவும் அவர்கள் கூறினர்.
“கணபதி பப்பா மோரியா” என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் இயற்கை களிமண்ணால் தயாரிக்கப்படும் சிலைகளை ஊக்குவிப்பதும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளால் ஏற்படும் நீர் மாசுபாட்டைத் தடுப்பதுமாகும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
