சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 உள்ளிட்ட தொகைகள் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலித்ததாகக் கூறப்படும் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பணியிடை நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் துறையில் இன்னும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
“எனக்கு தெரிந்தவரை பெரும்பாலான கடைகளில் எந்த பிரச்சனையும் இல்லை. மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன. சில இடங்களில் தவறான வழிநடத்தல் காரணமாக கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது. தவறு செய்தால் யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் எச்சரித்தார்.
மேலும், மிரட்டல் அல்லது அழுத்தத்திற்கு அரசு பயப்படாது என்றும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
