சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு அறிவித்துள்ள ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வரும் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கான தங்க மோதிரங்களை தயாரித்து அனுப்பும் பணியை ஒப்பந்தம் பெற்ற நகைக்கடை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் ஆண்டுக்கு சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. திட்டத்துக்காக தயாரிக்கப்படும் தங்க மோதிரங்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்காக தமிழகம் முழுவதும் 107 மையங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.2,560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள நகைக்கடை நிறுவனங்கள் தங்க மோதிரங்களை தயாரித்து, குறிப்பிட்ட மையங்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியுள்ளன.
89,955 மோதிரங்கள் முதல் கட்டத்தில் தயாரிப்பு
இது குறித்து ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், நான்கு கட்டங்களில் முதல் கட்டமாக 89,955 தங்க மோதிரங்களை தயாரித்து வழங்கும் பொறுப்பு தங்கள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மோதிரங்கள் திட்டத்துக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைகளில் வைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. அந்த பைகளில் ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவையில் உள்ள நிறுவனத்தின் இரண்டு பிரத்யேக மையங்களில் மோதிரங்களை பேக்கிங் செய்து அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
தற்போதைய சந்தை விலையின் அடிப்படையிலேயே அரசு தங்கத்திற்கான தொகையை செலுத்துகிறது. அதே நேரத்தில் தங்க மோதிரங்களை தயாரித்தல், ஹால்மார்க் தரச்சான்று முத்திரையிடுதல், பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் ஆகிய பணிகளை நகைக்கடை நிறுவனம் மேற்கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.
