சென்னை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக தி.மு.க. அமைத்துள்ள குழுவிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற சிவசங்கருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்தில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் சிவசங்கருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிவசங்கரை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
