பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
தொடரும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல்
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த மோதலின்போது இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இஸ்ரேல் – லெபனான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா ஏற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.
இந்த மோதல்களில் பொதுமக்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
9 பேர் பலி
இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் ஆதிக்கம் நிறைந்த தெற்கு லெபனானின் கபர் ரிமன் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் உள்கட்டமைப்புகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
