சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘அமரன்’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது. ‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார்.
மதுரை மண்ணின் பாரம்பரியம் மற்றும் கிராமத்து வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், முழுமையான கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், கன்னட திரைப்பட உலகின் பிரபல நடிகரும் இயக்குநருமான ராஜ் பி.ஷெட்டியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ‘சேயோன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள், ஆக்சன் காட்சிகள் மற்றும் குடும்ப பின்னணியிலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், படத்தில் சீமான் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மதுரையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அவர் விரைவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘எல்ஐகே’ திரைப்படத்தில் சீமான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும், சீமான் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
