சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்துக்கு ‘இஞ்சி வெல்லம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இப்படம், காதலை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படம் ஆரம்பத்தில் ‘புரொடக்ஷன் நம்பர் 23’ என்ற தற்காலிக பெயரில் தொடங்கப்பட்டது. கொல்கத்தாவில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து படத்தின் தலைப்பு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் அப்டேட் குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. அதில் ‘சி, ம், இ, ல், ஞ், வெ, ல்’ ஆகிய எழுத்துகள் காட்சிகளுக்கு இடையே இடம்பெற்றிருந்தன. இதனால் இந்த எழுத்துகளைக் கொண்டு படத்தின் தலைப்பு அமையலாம் என ரசிகர்கள் பல்வேறு யூகங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், படத்தின் தலைப்பு இன்று சிறப்பு வீடியோவுடன் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் சாய் பல்லவியின் பின்னணி குரலில், ‘நீ இஞ்சி… நான் வெல்லம்’ என்றும், ‘நான் வெல்லை… நீ இஞ்சி’ என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து விஜய் சேதுபதியின் பின்னணி குரலில் ‘இஞ்சி வெல்லம்’ என ஒலிக்கிறது.
இதையடுத்து, இருவரும் மழையில் நனைந்தபடி இருக்கும் புகைப்படத்துடன் ‘இஞ்சி வெல்லம்’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
