சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நடிகர் சிம்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தி சினிமாவில் ‘துரந்தர்’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, தமிழ் சினிமாவில் ‘அரசன்’ திரைப்படம் அமையும் என்று கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முன்னணி நடிகரான விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
வடசென்னை கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்ய விரும்பவில்லை என்றும், ரசிகர்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் ‘அரசன்’ திரைப்படம் தரமான சம்பவம் செய்யும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்திற்காக சிறுவயது முதல் பல்வேறு வயது தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெற்றிமாறன் முழுமையை விரும்பும் இயக்குநர் என்பதால் பல நிஜமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிம்புவின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
