சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் விஜய்யின் உடல்மொழி, மு.க.ஸ்டாலினை கேலி செய்வது போல் இருந்ததாகவும், அரசியல் விமர்சனத்திற்கும் தனிநபர் மாண்பைக் காயப்படுத்துவதற்கும் வித்தியாசம் இருப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்வர் தரப்பில், சம்பவத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய உடல்மொழி கண்ணியமான அரசியல் அணுகுமுறையாகக் கருத முடியாது. மனித மாண்புகளுக்கு எதிரான எந்தவிதமான செயல்பாடும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
அரசியல் விமர்சனம் வேறு… தனிநபர் மாண்பு வேறு
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கடுமையான விமர்சனங்களும் இடம்பெறலாம். ஆனால், தனிநபரின் தன்மதிப்பையும் மாண்பையும் காயப்படுத்தும் வகையிலான செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
அதிகாரம் மற்றும் பலம் இல்லாத எளிய மனிதரைக்கூட காயப்படுத்துவது மனிதநேயத்திற்கு உகந்ததல்ல என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
மூத்தோரை மதிப்பது உயர்ந்த பண்பு
அகவையில் மூத்தோரை மதிப்பது தமிழர் பண்பாட்டின் உயர்ந்த மாண்புகளில் ஒன்றாகும். மக்களின் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கும் முதல்வர், இனிவரும் காலங்களில் தனது பேச்சு மற்றும் உடல்மொழியில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, பேரவையில் திமுக தரப்பு வைத்த கோரிக்கையின்போது இடைமறித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சரின் கருத்து வரலாற்றுப் பிழையானது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மிசா காலத்தில் பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்ட திமுக தலைவர் தொடர்பாக தவறான கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அந்தக் கருத்தை சட்டத்துறை அமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் அரங்கில் கருத்து மோதல்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், அவை ஜனநாயக நாகரிகத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதே திருமாவளவனின் கருத்தாக அமைந்துள்ளது.
