லண்டன்: சில்வர்ஸ்டோன் மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயம் நிறைவடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் ஆகியோர் மூவர்ணக் கொடியுடன் ஒன்றாக இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்குதல், புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் முதலமைச்சர் விஜய் பிரிட்டன் சென்றுள்ளார்.
அங்கு சில்வர்ஸ்டோன் பந்தய தளத்தின் கட்டமைப்பு வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அஜித் அணிக்கு 3-வது இடம்
சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரும் பங்கேற்றார். இந்திய நேரப்படி இரவு தொடங்கிய இந்தப் போட்டியில் மொத்தம் 44 கார்கள் களமிறங்கின.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போட்டியின் முடிவில் அஜித்குமார் இடம்பெற்ற அணி 3-வது இடத்தை பிடித்தது. போட்டியின் பல்வேறு கட்டங்களில் கடுமையாக போராடிய அணி இறுதியில் முன்னணி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
பந்தயம் முடிந்த பின்னர் விஜய் மற்றும் அஜித்குமார் மூவர்ணக் கொடியுடன் ஒன்றாக இருந்த காட்சிகள் வெளியாகின. மேலும், விஜய் ரேஸ் டிராக்கில் ஓடும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் சர்வதேச மோட்டார் பந்தய களத்தில் ஒன்றாக இருக்கும் இந்த காட்சிகள் இரு தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
