தெஹ்ரான்: ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ விமான தளத்தை குறிவைத்து ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் ஏ-10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் சேதமடைந்ததுடன், எப்-15 ரக போர் விமானங்களும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றத்தின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோர்டானில் உள்ள முவாபக் சால்டி விமான தளத்தில் அமெரிக்க ராணுவ விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த தளத்தை குறிவைத்து நள்ளிரவில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
விமானங்கள் சேதம்
தாக்குதலில் ஏ-10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்ததாகவும், 8 எப்-15 ரக போர் விமானங்கள் சிறிய அளவில் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக ஈரான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்கனவே நீடித்து வரும் பதற்றத்துக்கு இடையே இந்த தாக்குதல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
