டெல்லி: அமெரிக்காவின் அதிகரித்து வரும் வர்த்தக வரிகள் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியாக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன.
டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் பங்கேற்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் பல்வேறு சவால்கள் குறித்து தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு எதிர்ப்பு
குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
ஒருதலைப்பட்சமாக கூடுதல் வரிகளை விதிப்பது மற்றும் வர்த்தகத் தடைகளை ஏற்படுத்துவது சர்வதேச வர்த்தகச் சூழலை பாதிக்கும் என உறுப்பு நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இதனால் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு, வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், பொருளாதார பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
டாலருக்கு மாற்று முயற்சி
சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் நீடித்து வரும் நிலையில், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களை பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரூபாய், யுவான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் நாணயங்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன.
மேலும், நாடுகளுக்கிடையே விரைவாகவும் குறைந்த செலவிலும் பணப் பரிமாற்றம் செய்வதற்காக பிரிக்ஸ் பேமெண்ட் டாஸ்க் போர்ஸ் அமைப்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும் முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது.
குஜராத்தில் ரிஸ்க் லேப்
நிதி மற்றும் காப்பீட்டுத் துறையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் பிரிக்ஸ் ரிஸ்க் லேப் அமைப்பதற்கான முயற்சியையும் இந்தியா முன்னெடுத்துள்ளது.
இதனுடன் உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக பொருளாதார பாதுகாப்பு மற்றும் தற்சார்பு நோக்கில் அந்த நாடுகளை மேலும் நெருக்கமாக இணைக்கும் காரணியாக மாறியுள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
