புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பேருந்தில் ஒன்றாக பயணம் செய்தனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முக்கிய தலைவர்களுக்காக பிரதமர் மோடி இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைவர்கள் பேருந்துகளில் பாரத் மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரே பேருந்தில் முக்கிய தலைவர்கள்
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் பேருந்தில் பயணம் செய்தனர்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
பிரதிநிதிகள் அனைவரையும் ஒரே முறையில் அழைத்துச் செல்வதன் மூலம் மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர்களின் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்ய முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல்
மேலும், முக்கிய தலைவர்களின் போக்குவரத்துக்காக தனித்தனி வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்த்து பேருந்து சேவை பயன்படுத்தப்பட்டதால், பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளங்களை முறையாக பயன்படுத்துதல், போக்குவரத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் பொதுமக்களின் வசதிக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றுக்கு இந்த ஏற்பாடு உதாரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
