சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த தொகுதிகள் காலியாகின. மேலும், திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 தொகுதிகளில் ஏற்கனவே தடை
தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
அரசியல் காரணங்களுக்காக மக்கள் அளித்த தீர்ப்பை புறக்கணித்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதால், மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் தேர்தல் செலவாக பயன்படுத்தப்படுகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களுக்காக பதவி விலகும் மக்கள் பிரதிநிதிகளிடம் தேர்தல் செலவுக்கான பொறுப்பை ஏற்படுத்தும் வகையில் சட்ட நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் முடிவு வெளியான குறுகிய காலத்திலேயே பதவி விலகும் மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிட்ட காலத்துக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
