திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி சிலை விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படும் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
பெண்கள், குழந்தைகள் பங்கேற்க தடை?
ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்கக்கூடாது என்றும், முளைப்பாரி எடுத்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய கட்டுப்பாடுகள் இந்துக்களின் மத வழிபாட்டு உரிமைக்கு எதிரானவை என இந்து முன்னணி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேள தாளம் வாசிப்பவர்கள் பள்ளிவாசல் அருகே குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும், சாலைகளில் ஊர்வலம் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. பிறப்பித்ததாக கூறப்படும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இல்லையெனில், தங்களது அமைப்பு சார்பில் நடத்தப்படும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த அமைப்பின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
