மதுரை: இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருமங்கலம் பார்முலாவை போன்று பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினாலும் மக்கள் தெளிவாகத் தங்கள் அரசியல் முடிவை எடுப்பார்கள் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும், தடுப்புக்காவல் ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மிசா விவகாரத்தில் கடும் விமர்சனம்
மிசா விவகாரத்தை திமுக மீண்டும் மீண்டும் பேசினால் அது அந்தக் கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அரசியல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். மதுராந்தகம் தொகுதியின் வேட்பாளர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய அவர், தொகுதிக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவதால் என்ன பயன் என்றும் விமர்சித்தார்.
பணம் கொடுத்தாலும் பயனில்லை
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்படும் திருமங்கலம் பார்முலாவை திமுக பயன்படுத்தினாலும், அது தேர்தல் முடிவை மாற்றாது என்று அவர் கூறினார்.
“எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக முடிவு செய்வார்கள்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் அவர் பரபரப்பான கருத்தை வெளியிட்டார்.
