சென்னை: நடிகர் விமல் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘மன்னர் வகையறா’ திரைப்பட தயாரிப்புக்காக நடிகர் விமல், பைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ.4 கோடியே 50 லட்சம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொகையை திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்பட்ட காசோலை, போதுமான பணம் இல்லாததால் திரும்பி வந்தது.
இதையடுத்து பைனான்சியர் கோபி, விமலுக்கு எதிராக சென்னை 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஜூலை 23-ந்தேதி தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு, விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்ததுடன், காசோலை தொகையை திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து விமல் சென்னை மாவட்ட 15-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ரூ.10 லட்சத்தை 60 நாட்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தண்டனையை நிறுத்திவைத்து கடந்த ஆகஸ்டு 4-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த நிபந்தனையை ரத்து செய்யக்கோரி விமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
