புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசுப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, நாடு முழுவதும் ஒரு மாத காலம் ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற மாபெரும் மக்கள் சேவை இயக்கத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
நரேந்திர மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதன்முறையாக குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக பணியாற்றிய அவர், கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.
25 ஆண்டுகள் அரசுப் பொறுப்பு
தொடர்ந்து பிரதமராக பணியாற்றி வரும் நரேந்திர மோடி, வரும் அக்டோபர் 7-ம் தேதியுடன் அரசுப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
இதனை முன்னிட்டு பாஜக சார்பில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத கால மக்கள் சேவை இயக்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்துக்காக பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் தலைமையில் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
ரத்ததான முகாமுடன் தொடக்கம்
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நவீன், பிரதமர் மோடியின் பொதுச்சேவை அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த இயக்கம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
செப்டம்பர் 17-ம் தேதி நாடு முழுவதும் ஒரே நாளில் ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு இயக்கம் தொடங்கப்படும் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஒரு மாத காலம் தூய்மைப் பணிகள், மரக்கன்று நடுதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும், பொதுமக்களும் தங்களால் இயன்ற சமூக சேவைகளில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
