மதுரை: தமிழக சிறைகளில் கைதிகள் தொலைபேசியில் பேசுவதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சிறைத்துறை டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோ.புதூரைச் சேர்ந்த ராஜா தாக்கல் செய்த மனுவில், சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தொலைபேசியில் பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக குரல் மற்றும் காணொலி அழைப்பு வசதிகளுடன் தொலைபேசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாதம் 120 நிமிடங்கள்
கைதிகள் தற்போது மாதம் 10 முறை, அதிகபட்சம் 120 நிமிடங்கள் வரை தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒவ்வொரு 10 நிமிட அழைப்புக்கும் சுமார் ரூ.28 கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மாதந்தோறும் ரூ.280 வரை செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெளிச்சந்தையை விட அதிக கட்டணம்?
சிறைக்கு வெளியே ரூ.200 முதல் ரூ.350 வரை செலுத்தினால் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் இணைய சேவைகள் கிடைக்கும் நிலையில், சிறைக்குள் தொலைபேசி அழைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயமற்றது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தொலைபேசி வசதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.
சிறையில் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், சிறைத்துறை டிஜிபி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
