சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழக முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.டி. அரசக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது இந்த வழக்கில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசக்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்ஜாமீன் கோரி மனு
இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான முத்துக்குமார், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில், இந்த மோசடி தொடர்பாக இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
போலீஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தல்
பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், முன்ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றும் போலீஸார் தரப்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெறப்பட்டுள்ள புகார்கள் மீது துரிதமாக விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், முன்ஜாமீன் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
வெளிநாடு தப்பிச் செல்ல தடை
இதற்கிடையே, முத்துக்குமார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி புகார் மற்றும் 177 தனித்தனி புகார்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளதால், இந்த வழக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
