வெல்லிங்டன்: இந்தியா–நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான சட்ட மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 93 உறுப்பினர்களும், எதிராக 29 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பில் ஆளும் தேசியக் கட்சியுடன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.
இந்தியா–நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி கையெழுத்தானது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தை அதிகரிப்பதும், முதலீடுகளை ஊக்குவிப்பதும் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வந்த பிறகு, நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 95 சதவீதத்துக்கு வரிச்சலுகை கிடைக்கும். அதேபோல், இந்தியப் பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் வரியில்லா அணுகல் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே, இந்த ஒப்பந்தம் அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய சந்தையில் கூடுதல் வாய்ப்புகளைத் திறக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் தங்களது உள்நாட்டு நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர் ஒப்பந்தம் அமலுக்கு வரும். தற்போதைய தகவலின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
