சென்னை: ரூ.2,000-க்கு மேற்பட்ட சில வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட சில வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate எனப்படும் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய தகவலின்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகர்களுக்கான UPI பரிவர்த்தனைகளில் 0.4 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்படும் என்றும், குறிப்பிட்ட சில துறைகளில் ரூ.5 நிலையான கட்டணம் பொருந்தும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண நபர்-நபர் UPI பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் பொருந்தாது.
ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு நிலையான கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டணங்கள் வர்த்தகர்களின் செலவை அதிகரிக்கக்கூடும் என்றும், அதன் தாக்கம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் பிரதிபலிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
UPI போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றுள்ள நிலையில், கட்டண முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசிடம் இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
