ரியாத்: இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி வந்ததாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோனை சவுதி அரேபிய வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு ஹவுதி அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15-ம் தேதி மெக்காவுக்கு தெற்கே இந்த ட்ரோன் இடைமறிக்கப்பட்டதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் டர்க்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார். ட்ரோன் தடை செய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாகவே அழிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மெக்கா, ஜெட்டா, தாயிப் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனித நகரங்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று சவுதி தரப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்துக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட தரப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், மெக்காவை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு மறுத்துள்ளது. புனிதத் தலங்களை தாங்கள் குறிவைப்பதில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏமன் உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஹவுதி அமைப்புக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
