சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026–27 கல்வியாண்டுக்கான நேரடி சேர்க்கை கால அவகாசம் செப்டம்பர் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 278 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
2026–27 கல்வியாண்டுக்கான நேரடி சேர்க்கை செப்டம்பர் 7-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் 22 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் தொழிற்பயிற்சி
கடந்த ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களில் 95 சதவீதம் பேர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக துறை தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகளில் திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு திறன் மற்றும் துறைக்கு ஏற்ப மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 அல்லது 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். பயிற்சியின்போது மொழிப் பாடங்களுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால், மேல்நிலை கல்விக்கான தகுதிச் சான்றிதழ்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஐ.டி.ஐ. பயிற்சி முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் வாய்ப்பும் உள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிக் கட்டணம் இல்லை. மாணவர்களுக்கு மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் தகுதியின்படி கூடுதல் நிதியுதவியும் கிடைக்கும்.
இதுதவிர, விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணி, பயிற்சிக்கான கருவிகள் மற்றும் கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சில அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று தங்களுக்கு விருப்பமான தொழிற்பிரிவைத் தேர்வு செய்து சேரலாம். கூடுதல் விவரங்களுக்கு 9499055642 என்ற அலைபேசி எண்ணிலும், 9499055612 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
