சென்னை: குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைவதால் ஏற்படும் இடைத்தேர்தல் செலவுகளை யார் ஏற்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம், கரூர், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்ற சில நாட்களிலேயே ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடை கோரி ஏற்கனவே பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரிப்பணத்தை வீணாக்கக் கூடாது
இந்த நிலையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததால் பொதுமக்களின் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் செலவை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்கிறார்கள் என்றும், குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்வது வாக்காளர்களை அவமதிக்கும் வகையில் அமையக்கூடும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இவ்வாறு ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் தற்போது என்னென்ன சட்ட நடைமுறைகள் உள்ளன என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
எனினும், இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதே விவகாரம் தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதால், இந்த மனுவையும் அந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
