ஒட்டாவா: அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அவசரமாக புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்றும், கனடாவை வலிமையான மற்றும் தன்னிறைவு பெற்ற பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
டொரன்டோவில் நடைபெற்ற கனடா முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பேசிய மார்க் கார்னி, அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் கனடா தனது நலன்களை பாதுகாத்துக் கொண்டு செயல்படும் என்று கூறினார்.
அமெரிக்காவும் கனடாவும் எப்போதும் அண்டை நாடுகளாக இருக்கும் என்றும், உண்மையான கூட்டாண்மை என்பது இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பாரம்பரியம், இறையாண்மை மற்றும் நலன்களை மதிப்பதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சொந்த வளங்களை பயன்படுத்த திட்டம்
கனடாவின் சொந்த வளங்கள் மற்றும் சட்டங்களை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மைய உள்கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்னி தெரிவித்துள்ளார்.
முக்கிய விமான நிலையங்களில் நீண்டகால சலுகைகளை வழங்குவதன் மூலம் தனியார் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் முதலீட்டை திரட்ட முடியும் என கனடா அரசு எதிர்பார்க்கிறது.
அமெரிக்காவுடன் உடனடியாக ஒப்பந்தம் செய்து கொள்வதைவிட, சரியான சூழ்நிலை உருவாகும் வரை காத்திருப்பதே கனடாவின் பொருளாதார நலன்களுக்கு ஏற்றதாக இருக்கும் என கார்னி தெரிவித்துள்ளார். இதே நேரத்தில், அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருப்பதை குறைத்து, பிற நாடுகளுடனான வர்த்தக உறவுகளையும் விரிவுபடுத்தும் நோக்கத்தையும் கனடா வெளிப்படுத்தியுள்ளது.
