போபால்: பூண்டு காய்கறியா அல்லது மசாலாப் பொருளா என்ற விவாதத்திற்கு மத்திய பிரதேச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வில் நடந்த இந்த வழக்கின் விசாரணையின் முடிவில், பூண்டு ஒரு காய்கறி என்றும், அதை மளிகைக் கடைகளில் விற்பனை செய்து வியாபாரிகள் பயன்பெறலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு, ம.பி.யில் உள்ள ஒரு விவசாய அமைப்பு, மாநில வேளாண் விற்பனை வாரியத்திடம் முறையிட்டதால், காய்கறி வகைகளில் பூண்டு சேர்க்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, 1972 ஆம் ஆண்டின் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுச் சட்டத்தின் கீழ் பூண்டு ஒரு மசாலாப் பொருளாக மறுவகைப்படுத்தப்பட்டதாக வேளாண் துறை அறிவித்தது.
இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் உள்ள காய்கறி முகவர்களின் கமிஷனை பாதிக்கும் என்பதால், கிழங்கு, பூண்டு மற்றும் வெங்காய முகவர்கள் சங்கம் பூண்டை காய்கறியாக அறிவிக்க 2016 இந்தூர் அமர்வில் வழக்கு தொடர்ந்தது.
விவசாயிகளை விட முகவர்களுக்கு சாதகமாக 2017ல் சங்கத்திற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்து முகேஷ் சோமானி 2017ல் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்தான் நீதிபதிகள் தர்மாதிகாரி, வெங்கடராமன் ஆகியோர் அடங்கிய இந்தூர் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக நீடித்து வந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.