வேலூர்: ஓடும் அரசு பேருந்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோதும் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பஸ் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே காட்பாடி சில்க் மில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (59). அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். பேரணாம்பட்டு பணிமனையில் இருந்து குடியாத்தம், வேலூர், திருப்பத்தூர், அரூர் வழியாக சேலம் செல்லும் பேருந்தை இயக்கி வந்தார்.
வழக்கம்போல் நேற்று காலை பணிக்கு வந்த வெங்கடசாமி, பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கி புறப்பட்டார். பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்தனர்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே புதிய தரைப்பாலம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் இறங்குவதற்காக எழுந்துள்ளனர். இதையடுத்து பேருந்தை நிறுத்த முயன்ற வெங்கடசாமிக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது.
சாலையோரம் நிறுத்திய சாமர்த்தியம்
மாரடைப்பால் உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், வெங்கடசாமி பேருந்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சாலையோரமாக பாதுகாப்பாக நிறுத்தினார். பேருந்து நின்ற அடுத்த நொடியே அவர் ஸ்டியரிங் மீது சாய்ந்து மயங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டனர். ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருக்காமல், அருகிலிருந்த குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும் வெங்கடசாமியை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிர் பிரியும் நிலையிலும் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை பாதுகாத்த ஓட்டுநரின் செயல் சக ஊழியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
