புதுடெல்லி: டெல்லி இளைஞர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட ‘ஜன் கவுஷல் கேந்திரா’ திட்டத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை சந்தித்தார்.
டெல்லியின் மோதி நகர் பகுதியில் செயல்படும் ‘ஜன் கவுஷல் கேந்திரா’வின் விளம்பர தூதராக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சுயசார்பு உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இதையடுத்து சஞ்சு சாம்சன், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சஞ்சு சாம்சனுக்கு ரேகா குப்தா வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியுடன் சஞ்சு சாம்சனுக்கு உள்ள தொடர்பையும் ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அவர் தனது ஆரம்ப காலத்தை டெல்லியில் கழித்ததுடன், அங்கு கிரிக்கெட் பயணத்தையும் தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜன் கவுஷல் கேந்திராவின் விளம்பர தூதராக சஞ்சு சாம்சன் இருப்பது, டெல்லி இளைஞர்களை திறன் மேம்பாடு மற்றும் சுயசார்பு நோக்கி ஊக்குவிக்கும் என ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், விளையாட்டு மற்றும் இளைஞர் திறன் மேம்பாட்டை இணைக்கும் வகையிலான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
