இங்கிலாந்து: இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான போட்டியின் முதல் நாளில் டர்ஹாம் அணிக்காக விளையாடிய மயங்க் அகர்வால் 177 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டர்ஹாம் அணி முதல் நாளிலேயே வலுவான ஸ்கோரை எட்டியது.
ஒரு கட்டத்தில் டர்ஹாம் அணி 3 விக்கெட்டுக்கு 74 ரன்கள் என தடுமாறியது. அப்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் மயங்க் அகர்வால் இணைந்து அணியின் நிலையை மாற்றினர்.
இருவரும் அதிரடியாக விளையாடி 15.3 ஓவர்களில் 105 ரன்கள் சேர்த்தனர். மயங்க் 50 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஸ்டோக்ஸ் 39 பந்துகளில் அரைசதம் அடைந்தார்.
தொடர்ந்து தனது 19-வது பவுண்டரியை விளாசிய மயங்க், டர்ஹாம் அணிக்காக முதல் சதத்தை பதிவு செய்தார். அந்த அணிக்காக தனது ஐந்தாவது இன்னிங்ஸிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
சதத்தைக் கடந்த பிறகும் அவரது அதிரடி தொடர்ந்தது. ஆலி ராபின்சனுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தார். இதன் விளைவாக டர்ஹாம் அணி முதல் நாளிலேயே 400 ரன்களை கடந்தது.
இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மயங்க் அகர்வால் 1,488 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 243 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் கிடைத்துள்ள வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வரும் மயங்க் அகர்வால், டர்ஹாம் அணிக்காக தனது பேட்டிங் திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
