சென்னை: தமிழகத்தில் நடைபெறும் நடப்பாண்டு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு 26.38 லட்சம் வீரர், வீராங்கனைகள் பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்.
38 மாவட்டங்களிலும் போட்டிகள்
முதல்வர் கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம், கொடி மற்றும் ஜெர்சியையும் அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
மகளிர் கால்பந்து போட்டிக்கான டாஸை போட்டு போட்டிகளையும் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் அக்டோபர் 4-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
கடந்த ஆண்டை விட பல லட்சம் அதிகம்
கடந்த ஆண்டு முதல்வர் கோப்பை போட்டிகளில் 16.28 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 26.38 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இதில் 14.86 லட்சம் பள்ளி மாணவர்களும், 5.35 லட்சம் கல்லூரி மாணவர்களும், 5.07 லட்சம் பொதுமக்களும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் 69 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் 38 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.74 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். சென்னையில் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
36 வீரர்களுக்கு ரூ.2.52 கோடி உதவி
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த 36 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து, சர்வதேச அரங்கில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
