சென்னை: துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கேப்டன் இஷான் கிஷன் சதம் விளாசியதால் கிழக்கு மண்டல அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது.
துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம் மற்றும் தென் மண்டல அணிகள் மோதுகின்றன.
டாஸில் வெற்றி பெற்ற கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் சாமா வி.மிலிந்த் பந்துவீச்சில் தியாகராஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிகர் மோகன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 120 பந்துகளில் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அரைசதத்தை கடந்த அபிமன்யு ஈஸ்வரன் 86 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் ரன்-அவுட் ஆனார். சுதீப் குமார் கராமி 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் அதிரடி சதம்
இதன்பின்னர் 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் இஷான் கிஷனும், குமார் குஷக்ராவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் முதல் நாள் ஆட்டத்திலேயே சதம் விளாசினார். மறுமுனையில் குமார் குஷக்ராவும் அரைசதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கிழக்கு மண்டலம் 79 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்திருந்தது.
இஷான் கிஷன் 111 ரன்களுடனும், குமார் குஷக்ரா 63 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இஷான் கிஷனின் இன்னிங்சில் 14 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். குமார் குஷக்ரா 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசியுள்ளார். 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 26.4 ஓவர்களில் 144 ரன்கள் சேர்த்துள்ளது.
தென் மண்டல அணி தரப்பில் சாமா வி.மிலிந்த் 2 விக்கெட்டுகளையும், திரிபுராவைச் சேர்ந்த விஜய் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ள நிலையில் கிழக்கு மண்டல அணி இன்று 2-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாட உள்ளது.
