மும்பை: பாலிவுட் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் இரண்டாவது முறையாக பெற்றோராகியுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
செப்டம்பர் 19-ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், இந்த மகிழ்ச்சியான செய்தியை இருவரும் சமூக வலைத்தளப் பதிவு மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ‘வெல்கம் பேபி கேர்ள்’ என்ற வாசகத்துடன் குழந்தையின் கால்தடம் இடம்பெற்றிருந்த புகைப்படத்தை வெளியிட்டனர்.
துவாவுக்கு தங்கை
தீபிகா மற்றும் ரன்வீர் சிங் 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘துவா’ என பெயரிட்டனர்.
தற்போது இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளதால், துவா தற்போது அக்காவாகியுள்ளார்.
ஏப்ரலில் அறிவிப்பு
தங்களது இரண்டாவது குழந்தை குறித்த கர்ப்ப அறிவிப்பை தீபிகா மற்றும் ரன்வீர் சிங் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர். அந்தப் பதிவில் குழந்தை செப்டம்பர் மாதம் பிறக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது குழந்தை பிறந்துள்ள செய்தியை இருவரும் எளிமையான பதிவின் மூலம் அறிவித்துள்ளனர். இதையடுத்து திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
