புதுச்சேரி: கனடாவில் விமானப் பயிற்சியின்போது உயிரிழந்த புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் மனோஜ் சிவக்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது குடும்பத்தினர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை, கல்வே பங்களா மெயின் வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மனோஜ் சிவக்குமார். கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்த அவர், கடந்த 3 ஆண்டுகளாக கனடாவில் விமானியாக பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி கனடாவில் ‘செஸ்னா 172’ ரக விமானத்தில் மனோஜ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தமும் விமானத்தில் இருந்தார். பயிற்சியின்போது விமானம் விபத்தில் சிக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இரு குடும்பங்களும் அதிர்ச்சியில் உறைந்தன. உயிரிழந்த மனோஜின் உடலை விரைந்து புதுச்சேரிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மனோஜின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர், உடலை விரைந்து கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன் விமானியாகி நாடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த குடும்பத்துக்கு இந்த விபத்து பேரிடியாக அமைந்துள்ளது. மனோஜின் தந்தை சிவக்குமார் கூறுகையில், கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியன்று தனது மகனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், நவம்பர் மாதத்துக்குள் விமானப் பயிற்சியை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்புவதாக மனோஜ் தெரிவித்ததாகவும் கண்ணீருடன் கூறினார்.
விமானியாக வேண்டும் என்ற கனவுடன் கனடா சென்ற இளைஞர், சொந்த ஊர் திரும்புவதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
