தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அதிமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் அழைப்பதாக தவெக மீது அவர் குற்றம்சாட்டினார்.
தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
“அதிமுக ஆட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம். வீடுகளில் உள்ள பாத்திரங்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் மக்கள் கவனிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
உள்ளாட்சித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து செயல்பட்டு டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுத்தோம்” என்று கூறினார்.
“அதிமுகவினரை ஏன் அழைக்கிறீர்கள்?”
தொடர்ந்து தவெகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளை தவெக பக்கம் அழைப்பதாக குற்றம்சாட்டினார்.
“எங்கள் கட்சிக்காரர்களின் வீட்டு கதவை ஏன் தட்டுகிறீர்கள்? உங்கள் கட்சியில் இருப்பவர்களைப் பாருங்கள். அதிமுகவினரை அழைத்துத்தான் கட்சியை நடத்த வேண்டிய நிலை ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக மற்றும் தவெகவில் இருப்பவர்களில் பலர் அதிமுக அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.
1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
