செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் கடுமையான புதிய விதிமுறைகளை அரசு கொண்டுவரக் கூடாது என்றும், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஏஐ ஆலோசனை
அமெரிக்க அரசு சேவைகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட America.gov இணையதளத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இதில் செயற்கை நுண்ணறிவு துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகள் என 31 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியை அரசு விதிமுறைகள் தடுக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’
ஏஐயை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உள்ள நீதித்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட அரசு அமைப்புகளே போதுமானவை என டிரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, செப்டம்பர் 29-ம் தேதி டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாடுகளில் ‘Artificial Intelligence’ என்பதற்கு பதிலாக ‘Super Intelligence’ மற்றும் ‘SI’ என்ற சொற்களை பயன்படுத்தும் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக உருவாக்கவும் பயன்படுத்தவும் உறுதிமொழி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
