திருமலை: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக மலையப்ப சுவாமி சர்வபூபால வாகனத்தில் எழுந்தருள்கிறார். கருடாழ்வாரை நோக்கிய நிலையில் சுவாமி எழுந்தருள, மறுபுறத்தில் விஷ்வக்சேனர் தனி பீடத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் செய்கின்றனர்.
இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி ஆயிரம் தீப அலங்கார சேவையில் பங்கேற்கிறார். நான்கு மாட வீதிகளில் சுவாமி எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தீபங்களின் ஒளியில் நடைபெறும் இந்தச் சேவையைக் காண ஏராளமான பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு இன்று கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் அர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் திருப்பதி பயணத்தைத் திட்டமிடும்போது சேவை நேர மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
