சென்னை: சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு தெலுங்கு பேசும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதே நேரத்தில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் அடுத்தடுத்து 6 புகார்கள் அளிக்கப்பட்டன. அகில இந்திய தெலுங்கு கூட்டமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப போலீசார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ’முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என, அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கஸ்தூரி தரப்பில், “சென்னை கூட்டத்தில் சிலரை குறிப்பிட்டு கஸ்தூரி அப்படி பேசினார்.
ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு எதிராக பேசவில்லை. ஆனால் வருத்தம் தெரிவிப்பதாக வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி, ”கஸ்தூரி கூறியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது. ”குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை” என கூறி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, கஸ்தூரியை கைது செய்ய, சென்னை, மதுரை போலீசார் தீவிரம் காட்டினர்.
இதில், இந்த வழக்கில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரியை, நேற்று இரவு, சென்னை போலீசார் கைது செய்து, இன்று சென்னை அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.