கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகிய பின்னர், கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 7ஆம் தேதி, ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர், லிபரல் கட்சியின் தலைவராக மார்க் கார்னி தேர்வாகி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்கிறார்.

இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் வரை, மார்க் கார்னி பிரதமராக இருந்து பணியாற்றுவார். லிபரல் கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டியில், முன்னாள் மத்திய வங்கித் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்றதாக, லிபரல் கட்சியின் தற்போதைய தலைவரான சச்சித் மெஹ்ரா அறிவித்தார்.
மார்க் கார்னி 59 வயதுடையவர். இவர் 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, கனடா வங்கியின் 8வது கவர்னராக பணியாற்றி உள்ளார். லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் 1,31,674 ஓட்டுக்களை பெற்று, கார்னி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மார்க் கார்னி தனது பதவியேற்பு குறித்து பேசும்போது, “அமெரிக்கா, கனடா அல்ல. கனடா ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது,” என கூறினார். அவர் மேலும், “அமெரிக்கா நம் இயற்கை வளங்களையும், குடிநீரையும், நிலத்தையும் அடக்கி ஆள விரும்புகிறது. இது அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து தெளிவாக தெரிகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடாவின் தொழிலாளர்களையும், குடும்பங்களையும், வணிகங்களையும் பாதிக்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்,” என தெரிவித்தார்.
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றது, அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தமது தலைமையில் பல முக்கியமான மாற்றங்களைத் துவங்குவதாக எதிர்பார்க்கப்படுகிறது.