சென்னை: ‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் தினேஷின் புதிய படத்துக்கு ‘பந்தா கேங்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியுள்ளது.
நடிகர் தினேஷ் ‘அட்டக்கத்தி’ படத்துக்கு பிறகு ‘குக்கூ’, ‘விசாரணை’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்திலும் தினேஷ் நடித்துள்ளார். அந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பந்தா கேங்ஸ்’ – முதல் பார்வை
தினேஷின் 26-வது திரைப்படமாக உருவாகியுள்ள புதிய படத்துக்கு ‘பந்தா கேங்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மதி ஆனந்த் இயக்கும் இப்படத்தை வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வேலாயுதம் தயாரிக்கிறார். தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஓஜி ரூட்டு தல’ என்ற அடைமொழியுடன் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளதால், தினேஷ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
