சென்னை: ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், படத்தின் கதாநாயகி பிரீத்தி முகுந்தன் தனது சினிமா பயணம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசியுள்ளார்.
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் நெருக்கமான படம் என்றும், இந்த படத்திற்காக அதிகளவில் உழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தனக்கு நான்கு படங்கள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சினிமா துறையில் தனது பயணம் தொடர்ந்து வருவது திருப்தி அளிப்பதாகவும் பிரீத்தி தெரிவித்துள்ளார்.
தனுஷுடன் புதிய படம்
அடுத்ததாக தனுஷுடன் நடிக்கும் புதிய படத்தில் தான் மதுரை பெண்ணாக நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதன்முறையாக கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்த பிரீத்தி, திருச்சியில் தான் வளர்ந்ததால் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் வாழ்க்கை முறை குறித்து தனக்கு ஓரளவு பரிச்சயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மதுரையின் பேச்சுவழக்கு, உடல்மொழி மற்றும் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களை கதாபாத்திரத்திற்கு ஏற்ப வெளிப்படுத்துவதற்காக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ‘அன்பில் அவன்’ படத்திற்கு சமீபத்தில் ‘யு/ஏ’ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், அக்டோபர் 2-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.
