மும்பை: நடிகை ஸ்ருதி ஹாசன், தனது பெயர், புகைப்படம், உருவம், குரல் மற்றும் ஆளுமை உரிமைகளை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்து ஆபாசமான மற்றும் விரும்பத்தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அனுமதியின்றி பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி இணையத்தில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், போலி விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற செயல்களால் தனக்கும் தனது தனிப்பட்ட உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது பெயர், உருவம், குரல், புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், ஏற்கெனவே சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்ருதி ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
