சென்னை: ‘தலைவன் தலைவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். யோகிபாபு, மிஷ்கின், சிங்கம்புலி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், தமிழ்க்குமரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
“இப்படத்தின் கதை, வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையம். சென்னையில் தொடங்கி, கோவை, பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, த்ரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்தும் உருவாகியுள்ளது” என்றது படக்குழு.