சென்னை: அந்த எண்ணமே இல்லை… இசையமைப்பாளர் இளையராஜாவை களங்கப்படுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை என கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகிய “கருப்பு” திரைப்படம் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இப்படத்தை இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கும் இந்த படத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதாவது, “கருப்பு” படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி, இசைஞானி இளையராஜாவை மறைமுகமாக கிண்டல் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளதாக சில நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமை தொடர்பாக பல ஆண்டுகளாக சட்ட ரீதியாக போராடி வரும் சூழலில், அதனை சுட்டிக்காட்டும் வகையில் அந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் இணையத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, இளையராஜா ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். “இசை உலகின் மிகப்பெரிய சாதனையாளரான இளையராஜாவை இவ்வாறு சித்தரிக்கக்கூடாது” என்றும், “அவரது காப்புரிமை போராட்டத்தை கிண்டல் செய்வது தவறு” என்றும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வந்தனர். சிலர் நேரடியாக ஆர் ஜே பாலாஜியை விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டனர்.
இந்த சர்ச்சை பெரிதாகிய நிலையில், “கருப்பு” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கருப்பு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சி என்பது வெறும் செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக மட்டுமே இடம் பெற்ற தற்செயலான ஒன்று. இசைஞானி இளையராஜா ஐயாவை காயப்படுத்தவோ அல்லது களங்கப்படுத்தவோ படக்குழுவிற்கு எந்த எண்ணமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்து வரும் இசை அரசரான இளையராஜாவுக்கு எங்களிடம் மிகுந்த மரியாதை உள்ளது. உள்நோக்கம் இல்லாமல் வைக்கப்பட்ட அந்த காட்சியால் இளையராஜா அல்லது அவரது ரசிகர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக எங்களின் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.