புதுச்சேரி: புதுச்சேரி வெங்கடசுப்ப ரெட்டியார் ரவுண்டானா அருகே கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
விசாரணையில் திருமாவளவன் ஆஜராகவில்லை. இதையடுத்து, இரண்டாவது குற்றவியல் நடுவர், நீதிபதி ரமேஷ், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜரானார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
புதுச்சேரியில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, தலித் அல்லாத பிற சமூகத்தினருக்கு எதிராக பேசியதாகவும், பகைமையை தூண்டும் விதமாகவும் என் மீது புகார் அளிக்கப்பட்டது.
அந்த வழக்கில் தலைமறைவாகிவிட்டதாக அறிவித்து நீதிமன்றத்தில் ஆஜராகும்படி என்னை கேட்டுக் கொண்டனர். எனவே அவர்கள் நேரில் ஆஜராகி வழக்கை விரைவுபடுத்துமாறு கூறியுள்ளேன்.
இது பொய் வழக்கு. விலக்கு கோரி விண்ணப்பித்துள்ளோம். இந்த பொய் வழக்கில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என ஏங்கிக் கொண்டிருப்பவர்களால் வதந்தி பரப்பப்படுகிறது. விசிக முக்கிய உறுப்பினராக உள்ள திமுக கூட்டணி இறுக்கமாக உள்ளது. உரிமைகள் தொடர்பாக எழுப்பப்படும் குரல் வேறு. கூட்டணி தொடர்பான நிலைப்பாடு வேறு.
இந்த வதந்தி எங்கள் கூட்டணியை பாதிக்காது. விளையாட்டுத் துறையால் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளில் கார் பந்தயமும் ஒன்றாகும்.
இதுபோன்ற போட்டிகளை நடத்துவது தலைநகர் சென்னைக்கு சுற்றுலாவை கவரும் வாய்ப்பாக அமையும். தொழில் முதலீட்டாளர்களை சென்னையை நோக்கி அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
பெங்களூரு மற்றும் புது தில்லி போன்ற நகரங்களில் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், அந்த நகரங்கள் வணிக முதலீடுகளைப் பெறுகின்றன. அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் காரணமாக நீதிமன்றமும் போட்டிக்கு அனுமதி அளித்துள்ளது என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ரஞ்சித்தை ஏன் பாராட்டவில்லை என்ற கேள்விக்கு, ‘வாழை’ படம் பார்த்தேன். படம் நன்றாக இருந்தது அதன் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டினேன். ‘தங்கலான்’ படத்தை நான் பார்க்கவில்லை. இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்று திருமாவளவன் கூறினார்.