சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சிம்புவின் அரசன் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்கின்றனர்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த அரங்கத்தில் வடசென்னை பகுதி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
3-வது கட்ட படப்பிடிப்பில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் ராஜன் கேரக்டரில் நடித்த அமீரும், சந்திரா கேரக்டரில் நடித்த ஆண்ட்ரியாவும் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். 3 மாதத்தில் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைகிறது. வருகிற தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவின் திரைப்பயணத்திலேயே இதுவரை உருவாக்கப்பட்ட திரைப்படங்களில், இதுவே மிகவும் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக அமையும் என்று கூறப்படுகிறது.