புதுடில்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த பணி ஆணைகளை எதிர்த்து சிலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
தமிழக அரசு தரப்பில், இது அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் வாதிடப்பட்டது. எதிர்மனுதாரர்கள் தரப்பில், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தால் அவரது குடும்பம் பாதிக்கப்படும் என்றும், அந்த குடும்பத்துக்கு அரசு உதவி வழங்குவதைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் அரசியலை புகுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
