திருமலை: நகரத்திற்கு வெளியே இருந்து வரும் ஆந்திர அரசு பேருந்துகளுக்கு திருமலையில் ஒரு முறை இலவசமாக இயக்கும் திட்டத்தை தேவஸ்தான அதிகாரி தொடங்கி வைத்தார். கோயில்கள், விடுதிகள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல ‘ஸ்ரீவாரி தர்ம ரதம்’ என்ற பெயரில் திருமலையில் 10 இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், திருமலையைச் சுற்றி வர ஆந்திர மாநில அரசு (APSRTC) பேருந்துகளில் இலவச சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நகரத்திற்கு வெளியே இருந்து திருமலைக்கு வரும் இந்த அரசு பேருந்துகள் திருமலையில் ஒரு முறை இலவசமாக இயக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சேவை நேற்று தொடங்கப்பட்டது. கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி இலவச பேருந்து பயணத்திற்கு தலைமை தாங்கினார். அவர் கூறினார்: திருமலையில் பக்தர்களிடமிருந்து தனியார் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் ABSRTC-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அவர்களும் ஒப்புக்கொண்டு பேருந்துகளை இலவசமாக இயக்க முன்வந்துள்ளனர். இந்த பேருந்துகள் திருமலையில் உள்ள ஸ்ரீவாரி தர்ம ரதங்களைப் போலவே இயங்கும். பக்தர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த இலவச பயணங்கள் பக்தர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும். திருமலையில் உள்ள ஸ்ரீவாரி தர்ம ரதங்கள் மூலம் நாங்கள் ஏற்கனவே தினமும் 300 பயணங்களை இயக்கி வருகிறோம்.
அதிக பேருந்துகள் வருவதால், கூடுதலாக 80 பயணங்களை இயக்க முடியும். ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வருவதால், பொது போக்குவரத்து அமைப்பு பலப்படுத்தப்படும். பக்தர்கள் இந்த சேவைகளை எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் பயன்படுத்தலாம். திருமலையில் இருந்து திருப்பதிக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.